Tuesday, January 22, 2013

Les Misérables - திரைத்துளிகள்


                      
                                   பிரெஞ்சு புரட்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட  லே-மிஸ்ரபில் எனும் பிரெஞ்சு நாவலை அதே பெயரில் இப்போது திரைப்படமாக்கியிருக்கிறார்கள்..  டாம் ஹூப்பர் இயக்கிய இந்த படத்தில் ஜேக் ஹியுமேன், ரஸ்ஸல் க்ரோவ், அன்னே ஹேத்தவே மற்றும் அமாண்டா சீப்ரெட்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  இந்த படம் எட்டு பிரிவுகளில்  ஆஸ்கர்  அவார்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நான் பார்த்த படங்களிலேயே ஹரிதாஸ் படத்திற்கு பின் அதிக பாடல்களைக் கொண்ட இசைக் காவியம் இதுதான் (50 பாடல்கள்). 



                                      பசிக்காக பிரட்டை திருடிய குற்றத்திற்காகவும், சிறையிலிருந்து பல முறை தப்ப முயற்சித்த காரணத்துக்காகவும் ஜேன் வால் ஜேன் (ஹியு ஜேக்மேன்) எனும் கைதி பத்தொன்பது வருடங்கள் சிறையிலடைக்கப்படுகிறார். பிறகு பரோலில் வெளியே வரும் இவரை விடாமல் துரத்துகிறார் இன்ஸ்பெக்டர் ஜேவர்ட்( ரஸ்ஸல் க்ரோவ்). பரோலில் விட்டாலும் ஜேனை "மிகவும் ஆபத்தானவன்" என்று முத்திரை குத்தி அனுப்பிவிடுவதால் வேறு எங்கும் வேலை கிடைக்காமல் பசியால் அவதிப்படுகிறார். அப்போது ஒரு பாதிரியார் அவருக்கு உணவளித்து அடைக்கலமும் கொடுக்கிறார். அன்றிரவு அங்கிருந்த வெள்ளிப் பாத்திரங்களை கொள்ளையடித்து செல்கிறான் ஜேன். காவலர்களிடம் பிடிபடும் இவரை பாதிரியார் தான் தான் அவற்றை கொடுத்தனுப்பியதாக சொல்லி காப்பாற்றவும் அப்போதே மனம் திருந்துகிறார் ஜேன். இதே சமயம் ஜேவர்ட் ஜேனை மீண்டும் சிறையிலடைக்க துடிக்கிறார்.



                                       எட்டு வருடங்களுக்கு பிறகு ஜேன் வட பிரான்சின் மான்ட்ரியேல் மாகாண மேயர் ஆகிறார். ஒரு தொழிற்சாலையின் முதலாளியாகவும் இருக்கிறார். அப்போது அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் பேண்டைன் ( அன்னே ஹேத்தவே ) தன்  மகளுக்கு பணம் அனுப்ப முயன்ற குற்றத்துக்காக (?!!) பணி நீக்கம் செய்யப்படுகிறார். அவர் ஜேனிடம் முறையிட்டும் நியாயம் கிடைக்காததால் அவர் விபச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒரு சமயம் மேயர் வீதி உலா வரும் நேரம் பேண்டேனை பார்க்கும் ஜேன் அவருடைய நிலைக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதே சமயம் ஜேவர்ட் குற்றவாளி ஜேன் என்று தவறாக நினைத்து வேறொருவரை கைது செய்ய மேயரிடம் அனுமதி கோருகிறார். மனசாட்சி உறுத்த ஜேன் கோர்ட்டில் தான் யார் என்ற உண்மையை கூறுகிறார். 



                                       மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேண்டைன் குணமடைந்தவுடன் தான் சிறைக்கு வருவதாக கூறுகிறார். இதை ஏற்றுக் கொள்ளாத ஜேவர்ட் அவரை மீண்டும் துரத்துகிறார். உடல்நிலை மோசமடைந்த பேண்டைன் மரணப் படுக்கையில் தன்  மகளை கவனித்துக் கொள்ளும்படி ஜேனிடம் கேட்டுக் கொண்டு உயிர் துறக்கிறார். பேண்டைனுக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவளுடைய மகளை மீட்கிறார். அதோடு சிறுமி கோசெட்டுடன் வேறோர் நகரத்திற்கு பயணப்படுகிறார். ஜேவர்ட் ஜேனை  கைது செய்ய முடியாமல் மீண்டும் ஏமாற்றமடைகிறார்.




                                        ஒன்பது வருடங்களுக்கு பிறகு பசி பட்டினியால் வாடும் மக்குளுக்கு ஆதரவாக ஒரு இளைஞர்கள்(மாணவர்கள்) கூட்டம் என்ஜோல்ராஸ் எனும் மாணவனின் தலைமையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராகின்றனர். அதில் ஒரு இளைஞன்  மாரியசை கொசெட்டின் பால்ய தோழி எபோனின் விரும்புகிறாள். ஒரு போராட்டத்தின் போது மாரியஸ் இளம்பெண் கொசட்டை (அமாண்டா சீப்ரெட் ) பார்க்க,  முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான். கொசெட்டும் மாரியசை விரும்புகிறான். இந்த சமயத்தில் போராட்டத்தை அடக்குவதற்காக வரும் இன்ஸ்பெக்டர் ஜேவர்ட் உளவாளியாக போராட்டக் குழுவில் ஒருவனாக இணைகிறான். மேலும் அவனுக்கு ஜேனின் இருப்பிடம் தெரிந்துவிடுவதால் ஜேனுக்கு தொல்லை கொடுக்கிறான்.



                                       இதையறிந்த ஜேன் மறுநாள் ஊரைக் காலி செய்து தன் வளர்ப்பு மகள் கொசெட்டுடன் வேறிடம் செல்ல தயாராகிறார். அதே இரவு இளைஞர் அணி மறுநாள் போராட்டத்துக்கு திட்டமிடுகிறார்கள். கொசெட்டோ தன் காதலனை பிரிய மனமின்றி தவிக்கிறாள். இந்தக் காதலை கேள்விப்படும் ஜேன் தன் மகளை மாரியசுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து போர் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். தன்னையும் போராட்டத்தில் ஒருவனாக இணைத்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறான். இதற்கிடையில் உளவாளி ஜேவர்ட்டை கண்டறியும் போராட்டக் குழு அவனைக் கொள்ளும் பணியை ஜேனிடம் கொடுக்கின்றனர். ஆனால் ஜேனோ  அவனைக் கொள்ளாமல் தப்ப விடுகிறார். தப்பிச் சென்ற ஜேவர்ட் படையுடன் வந்து போராட்டக் குழுவை தாக்குகிறான்.



                                        இந்த தாக்குதலில் என்ஜோல்ராஸ், எபோனின் மற்றும் போராட்டக் குழுவினர் அனைவரும் உயிர் துறக்கின்றனர். மாரியஸ் காயமடைகிறான். அவனை ஜேன் காப்பாற்றி ஒரு பாதாளச் சாக்கடை வழியாக கூட்டி வருகிறான். சாக்கடையின் வெளி வாயிலில் ஜேனைக் கைது செய்ய தயாராக இருக்கிறான் ஜேவர்ட். ஆனால் கடைசியில் மனம் திருந்தி கைது செய்யாமல் விட்டுவிடுகிறான். அதோடு கடமையில் இருந்து தவறியதற்காக பாதாளச் சாக்கடையில் விழுந்து உயிர் விடுகிறான். மாரியஸ் குணமடைந்தவுடன் அவனை கொசெட்டுடன் சேர்த்து வைத்துவிட்டு தன்  பழைய கதை தெரிந்தால் கொசெட் தன்னை வெறுத்துவிடுவாள் என எண்ணி சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு செல்கிறான். ஆனால் உண்மையறிந்த கொசெட் மாரியசின் உதவியுடன் ஜேனை  கண்டுபிடித்து திரும்பி வருமாறு அழைக்கிறாள். மகள் தன்னைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில் ஜேன் தன் உயிரை  விடுவதோடு படம் நிறைவடைகிறது.



                                       எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இந்தப் படமும் ஓர் நிரந்தர இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல கதை மட்டுமல்லாமல் ஹியு ஜேக்மேன், ரஸ்ஸல் க்ரோவ் மற்றும் அன்னே ஹேத்தவே ஆகியோரின் சிறப்பான நடிப்பில் உருவான இந்த இசைப் பயணத்தை நம்முடைய மக்களும் அரங்கம் நிறைய கண்டுகளித்தது ஆரோக்கியமான விஷயம்..


                                     

No comments:

Post a Comment

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...